வைகாசி திருவிழா: கோட்டை பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம்
வைகாசி திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
சேலம்:
வைகாசி திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
கோட்டை பெருமாள்
சேலம் கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாதர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்தநிலையில், இந்த ஆண்டு வைகாசி தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதனிையே நேற்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக அதிகாலை 5.45 மணிக்கு கோவிலில் இருந்து சாமி தேர் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து நடக்கும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு கடை வீதியில் இன்று காலை போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரணம், 16-ந் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.