வைகாசி மாத பிரதோஷம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


வைகாசி மாத பிரதோஷம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jun 2023 2:18 AM IST (Updated: 2 Jun 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மதுரை

மேலூர்

பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பிரதோஷ சிறப்பு பூஜை

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

சங்கரலிங்கம் சுவாமியும், நந்தி பெருமானும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் தேவாரம், திருவாசகம், நந்தி பதிகம் சிவபுராணம், சிவன் 108 போற்றி, பாராயணம் வாசித்தனர்.

மதுரை

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், இன்மையில் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்பட பல சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.

திருப்பரங்குன்றம்

வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று ஜடாமுனீஸ்வரர் அலங்காரத்தில் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் அருள்பாலித்தார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வைகாசி மாத பிரதோஷ பூஜைகள் அங்குள்ள பொது மகாலிங்க சுவாமி ஜீவ சமாதி கோவிலில் நேற்று நடந்தது. இதில் சுவாமிக்கு, பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் தீபாராதனைகள், பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதை போல அலங்காநல்லூர், காஞ்சரம்பேட்டை, பாறைபட்டி, சிவன் கோவில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடந்தது.


Next Story