பாசன வாய்க்காலை அழித்து பாதை அமைப்பு


பாசன வாய்க்காலை அழித்து பாதை அமைப்பு
x
திருப்பூர்


மடத்துக்குளம் அருகே பி.ஏ.பி. பாசன வாய்க்காலை அழித்து மண் பாதை அமைக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சுற்று தண்ணீர்

பி.ஏ.பி. தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் நீர் திருமூர்த்தி அணையில் இருப்பு வைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் நிலையில் ஒவ்வொரு பகுதியும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையே தண்ணீர் பெறும் நிலை உள்ளது.

தற்போது பருவமழை கைவிட்ட நிலையில் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையில் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு உயிர்த்தண்ணீராக 4-ம் மண்டலத்தில் ஒரு சுற்று தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த சாலரப்பட்டி பகுதியில் ஒரு சுற்று தண்ணீரைக்கூட பெற முடியாத அளவுக்கு பாசன வாய்க்கால் அழிக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அளவீடு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மருள்பட்டி பகிர்மானக்கால்வாய் மடை எண்-18 வலது உப பகிர்மானக்கால்வாய் 7 மடைகள் மூலம் 140 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த நிலையில் சிலர் பாதை அமைக்கும் வகையில் அரணி வாய்க்கால் எனப்படும் பாசன வாய்க்காலை மண்ணால் மூடி விட்டனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ.வுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உதவியுடன் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து சர்வே கற்கள் நடப்பட்டது.

ஆனால் அதையும் மீறி பகிர்மான கால்வாயை அழித்து பொதுப்பணித்துறை புறம்போக்கு இடத்தில் பாதை அமைத்துள்ளனர்.பாசனத்துக்கு இன்று (புதன்கிழமை) தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் முழுமையாக இந்த பகுதி விவசாயிகளுக்கு பாசன நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பாசன வாய்க்காலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு சிக்கல்களால் விவசாயத்தை கைவிட்டு பலரும் மாற்றுத்தொழில் தேடி சென்று வருகின்றனர். ஒரு சிலரின் சுய லாபத்துக்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் பாசன நீரும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story