பத்மாவதி தாயார் அலங்காரத்தில் காட்சி அளித்த வைகுண்டபதி பெருமாள்
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
பெருமாள் நேற்று பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் 3-வது சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி ஸ்ரீதேவி- பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு திருவீதி உலா, கருட சேவை நடந்தது.