பட்டுக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா
பட்டுக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், மதுக்கூர் பேரூராட்சி தலைவர் வகிதாபேகம், பட்டுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், மதுக்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் இளங்கோ, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனாரெட்டி வரவேற்றார். விழாவில் பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டாரங்களை சேர்ந்த 300 கர்ப்பிணி பெண்களுக்கு அண்ணாதுரை எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் ஆகியோர் சீர் வரிசை பொருட்களை வழங்கி அட்சதை போட்டு வாழ்த்தினர். தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய உறவினர்களுக்கு சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டது. முடிவில் மதுக்கூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவி நன்றி கூறினார்.