கும்பகோணம் கோர்ட்டில் வாலிபர் சரண்
கும்பகோணம் கோர்ட்டில் வாலிபர் சரண்
குடவாசல்:
குடவாசல் அருகே நடந்த தாய், மகன் கொலை வழக்கில் கும்பகோணம் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
சொத்து தகராறு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது55). இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அவருடைய அண்ணன் அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியதாசுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆரோக்கியதாசின் மகன்கள் அன்பழகன், செபஸ்டின் ஆகிய 2 பேரும் கலந்துகொண்டனர். இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஸ்கர் மகன் அஜய் (19) என்பவரும் வந்துள்ளார்.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது செபஸ்டின், அஜயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அஜய் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த தகவல் அறிந்து அஜயின் தாய் அலங்காரமேரி (55) அங்கு ஓடி வந்தார். அவரை செபஸ்டின் அண்ணன் அன்பழகன் கத்தியால் குத்தினார். இதில் அலங்காரமேரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து செபஸ்டின், அன்பழகன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
கோர்ட்டில் சரண்
இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவருடைய தம்பி செபஸ்டின் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று செபஸ்டின் கும்பகோணம் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.