மனிதர்களுக்குள் பிரிவினை கூடாது என்று வலியுறுத்தியவர் வள்ளலார்:முப்பெரும் விழாவில் கலெக்டர் விசாகன் பேச்சு


மனிதர்களுக்குள் பிரிவினை கூடாது என்று வலியுறுத்தியவர் வள்ளலார்:முப்பெரும் விழாவில் கலெக்டர் விசாகன் பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனிதர்களுக்குள் பிரிவினை கூடாது என்று வலியுறுத்தியவர் வள்ளலார் என்று திண்டுக்கல்லில் நடந்த முப்பெரும் விழாவில் கலெக்டர் விசாகன் பேசினார்.

திண்டுக்கல்

முப்பெரும் விழா

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 'வள்ளலார் 200' என்ற தலைப்பில் முப்பெரும் விழா திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார் பிறந்து 200-வது ஆண்டு தொடக்க விழா, இவர் தருமசாலை தொடங்கி 156-ம் ஆண்டு தொடக்க விழா, ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ம் ஆண்டு தொடக்க நாள் ஆகிய விழாக்களை முப்பெரும் விழாவாக நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் எண்ண வேண்டும் என மக்களுக்கு எடுத்துக்கூறியவர் வள்ளலார். இவர் மனித உயிர்களுக்குள் பிரிவினை கூடாது என்று 19-ம் நூற்றாண்டிலேயே வலியுறுத்தியவர் ஆவார்.

தருமசாலை

அதுமட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தருமசாலையை திறந்தவரும் வள்ளலார் தான். கொடை வள்ளலாக திகழ்ந்த வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் இதுபோன்ற விழாக்களை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் பேசினார். அதையடுத்து வள்ளலார் பாடிய ஆயிரம் பாடல்களை கொண்ட திருவருட்பாவை ஒப்புவிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் விசாகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், வள்ளலார் வம்சாவழியை சேர்ந்த உமாபாரதி, ராமசாமி, நாஞ்சில், விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story