வேன் மீது லாரி மோதல்; பா.ஜ.க.வினர் உள்பட 16 பேர் காயம்


வேன் மீது லாரி மோதல்; பா.ஜ.க.வினர் உள்பட 16 பேர் காயம்
x
தினத்தந்தி 30 July 2023 2:30 AM IST (Updated: 30 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பா.ஜ.க.வினர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பா.ஜ.க.வினர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.

பா.ஜ.க.வினர்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி, ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ராமேசுவரம் சென்றனர். இதேபோல் கோவை மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினர் 17 பேர் நேற்று முன்தினம் ஒரு வேனில் ராமேசுவரம் சென்றனர். அங்கு பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை கோவை தென்கரையை சேர்ந்த தாமோதரன் (வயது 30) என்பவர் ஓட்டினார்.

அதிகாலை 3 மணி அளவில் திண்டுக்கல் தோமையார்புரத்தில், வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் வேன் வந்தது. அப்போது பின்னால் தூத்துக்குடியில் இருந்து குஜிலியம்பாறை நோக்கி சிமெண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த குமார் (38) என்பவர் ஓட்டினார். உரிமையாளர் முருகன் உடன் வந்தார்.

16 பேர் காயம்

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அந்த லாரி, முன்னால் சென்ற வேன் மீது மோதியது. அப்போது லாரி மோதியதில் வேன் சிறிது தூரம் தறிகெட்டு ஓடியது. இருப்பினும் டிரைவர் சாமர்த்தியமாக வேனை சாலையில் பிரேக் போட்டு நிறுத்தினார். ஆனால் வேனில் வந்த பா.ஜ.க.வினர் லாரி மோதியதால் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அதன்படி, வேனில் வந்த கோவையை சேர்ந்த ராஜேஷ் (34), அசோக்குமார் (32), சந்துரு (16), பிரதாப் (26), பார்த்திபன் (28), ஹரிபிரசாத் (27), தினேஷ்குமார் (23), சிவக்குமார் (48), தர்மதுரை (23) உள்பட 14 பேர் காயமடைந்தனர். அதேபோல் வேன் மீது மோதிய நிலையில் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் வந்த 2 பேரும் காயமடைந்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story