சாலையோரம் பஞ்சராகி நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி
வேடசந்தூர் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்றிருந்த சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வேடசந்தூர் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்றிருந்த சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
பஞ்சராகி நின்ற வேன்
கிருஷ்ணகிரியில் இருந்து மதுரை நோக்கி காலிபிளவர் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த வேனை, கிருஷ்ணகிரியை சேர்ந்த சங்கர் (வயது 26) என்பவர் ஓட்டினார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான தர்ஷன் (22), சங்கரின் உறவினர் கோவிந்தராஜ் (18) ஆகியோர் வந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள ரங்கநாதபுரம் பஸ் நிறுத்த பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனின் பின்பக்க டயர் ஒன்று திடீரென்று பஞ்சரானது. இதனால் சங்கர், வேனை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் சங்கரும், தர்ஷனும் சேர்ந்து சரக்கு வேனில் பஞ்சரான டயரை கழட்டி மாட்டிக்கொண்டிருந்தனர். வேனின் அருகில் கோவிந்தராஜ் நின்றிருந்தார்.
2 பேர் பலி
இதற்கிடையே அந்த வழியாக மும்பையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை, நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் (46) என்பவர் ஓட்டினார்.
இந்தநிலையில் அந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்றிருந்த சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும் லாரி மோதியதில், சரக்கு வேனில் டயரை கழட்டி மாட்டிக்கொண்டிருந்த சங்கர், தர்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். கோவிந்தராஜ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
இதேபோல் சரக்கு வேன் மீது மோதியதில் லாரியின் முன்பக்க பகுதி சேதமடைந்தது. மேலும் அதனை ஓட்டி வந்த மாரிமுத்துவும் படுகாயம் அடைந்தார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து கூம்பூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலை ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர்.
பின்னர் படுகாயம் அடைந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் விபத்தில் உயிரிழந்த சங்கர் மற்றும் தர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.