லாரி மீது வேன் மோதியதில் 13 அய்யப்ப பக்தர்கள் படுகாயம்


லாரி மீது வேன் மோதியதில் 13 அய்யப்ப பக்தர்கள் படுகாயம்
x

லாரி மீது வேன் மோதியதில் 13 அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர்

அய்யப்பன் கோவிலுக்கு...

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, வைரபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி சுலோச்சனா(வயது 52). இவர் தனது உறவினர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்தார். பின்னர் அவர்களுடன் அய்யப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா வேனில் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக வேனில் அவர்கள் புறப்பட்டனர்.

வேனை அதே பகுதியை சேர்ந்த ராஜா (40) என்பவர் ஓட்டியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே வேன் வந்தது. அப்போது அதே சாலையில் வேனுக்கு முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர் எவ்வித சமிஞ்கையும் செய்யாமல் திடீரென லாரியை வலது புறத்தில் இருந்து இடது புறம் திருப்பியதாக கூறப்படுகிறது.

லாரி மீது வேன் மோதல்

இதனால் நிலை தடுமாறிய சுற்றுலா வேன் அந்த லாரி மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 19 அய்யப்ப பக்தர்களில் சுலோச்சனா, வீரராகவனின் மனைவி குப்பம்மாள் (65), ராஜேஷ் (38), அவரது மகன் நித்தீஸ்வரன் (12), சண்முகம் (58), அவரது மனைவி அமுதபாரதி (55), நாகராஜின் மனைவி தேன்மொழி (55), மணிவண்ணனின் மனைவி சாந்தகுமாரி (55), ராஜசேகர் (33), முருகன் (44), முத்துவின் மகன் சீனிவாசன் (25), விஸ்வநாதனின் மனைவி விஜயா (58), கார்த்திக்கேயனின் மனைவி விஜயலட்சுமி (59) ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர். வேன் டிரைவர் ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதற்கிடையே விபத்து ஏற்பட்ட பின்னர், லாரியை நிறுத்தாமல் அதன் டிரைவர் ஓட்டிச்சென்றார். இந்த விபத்தை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story