லாரி மீது வேன் மோதல்; 12 மாணவ, மாணவிகள் படுகாயம்


லாரி மீது வேன் மோதல்; 12 மாணவ, மாணவிகள் படுகாயம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது வேன் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேடப்பள்ளியில், மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சேர்ந்த 22 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை வேன் ஒன்று எலசேப்பள்ளி நோக்கி சென்றது. இதனை எலசேபள்ளியை சேர்ந்த டிரைவர் நஞ்சுண்டன் என்பவர் ஓட்டி சென்றார்.

சுண்டகிரி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி மீது வேன் மோதியது. இதனால் மாணவ-மாணவிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் மாணவர்கள் கோவர்த்தன பிரசாத் (15), திலக் (13), தினேஷ் (14), ஷாலினி (13), தீக்‌ஷிதா (12), சிந்து (13), சரண் (12), குருகிரண்(13), கீர்த்தி(11), சிந்து (15), வேன் டிரைவர் நஞ்சுண்டன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பல மாணவ, மாணவிகள் லேசான காயம் அடைந்தனர்.

விசாரணை

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோரை மீட்டு சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். இதில், திலக், கோவர்த்தன பிரசாத், தினேஷ், சரண் ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story