மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; பத்திரப்பதிவு ஊழியர் பரிதாப சாவு
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதலில் பத்திரப்பதிவு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மேலூர்,
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதலில் பத்திரப்பதிவு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பத்திரப்பதிவு ஊழியர்
மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ளது செட்டியார்பட்டி விலக்கு. இப்பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சிட்டம்பட்டி அருகிலுள்ள பூலாம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுபாஸ்ரீதரன் (வயது 15), அரசு (15), சத்தியபிரியன் (16) ஆகிய 3 பேர் வந்துள்ளனர். கபடி போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு பஸ்சுக்காக செட்டியார்பட்டி விலக்கில் நின்றுள்ளனர்.
அப்போது கருங்காலக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்த மேலூரை சேர்ந்த விவேகானந்தன் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியே மேலூருக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் லிப்ட் கேட்டு மாணவர்கள் 3 பேரும் அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளனர். அந்த நேரத்தில் அவர்களின் பின்பக்கத்தில் அதிவேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று இவர்களின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விவேகானந்தன் அதே இடத்தில் இறந்தார்.
3 மாணவர்கள் படுகாயம்
இந்த விபத்தில் 3 மாணவர்களும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் நான்குவழி சாலை மீட்பு குழு கார்த்திக் ஆகியோர் விபத்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
படுகாயமடைந்த மாணவர்கள் 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பில்லுச்சேரி மாத்தூரை சேர்ந்த வேன் டிரைவர் முகுந்தன் (29) என்பவரை மேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.