வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
இரணியல் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
என்ஜினீயர்
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள குன்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் ரமேஷ் (வயது 28), என்ஜினீயர். இவர் பிளாஸ்டிக் கேனில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவருடன் அழகன்பாறையை சேர்ந்த அருள்சுந்தர்ராஜ் மகன் சுபாஷ் (32) என்பவரும் பணிபுரிந்தார்.
விபத்து
நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டி சென்றார்.
மோட்டார் சைக்கிள் இரணியல் மேலத்தெரு சந்திப்பு பகுதியில் சென்ற போது திடீரென அவருடைய கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷ், சுபாஷ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினர்.
2 பேர் பலி
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுபாசுக்கு தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், ரமேசுக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ரமேசும் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து வேன் டிரைவரான ஆலஞ்சி ராபின்ரோஸ் (35) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.