சென்னை-கோவை இடையே சேலம் வழியாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி-5 மணி 35 நிமிடத்தில் சென்றடைந்தது
சென்னை-கோவை இடையே சேலம் வழியாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் 5 மணி நேரம், 35 நிமிடங்களில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
மோடி வருகை
இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்த பயணிகள் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கினர். அந்தவகையில், 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி சென்னை - மைசூரு இடையில் 5-வது வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டது. தற்போது 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரெயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, தமிழகத்திற்குள் வந்தே பாரத் ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை-கோவை இடையே ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி நேரில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வந்தே பாரத் ரெயில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இதேபோல, அன்றைய தினம் ரூ.294 கோடி மதிப்பிலான 3 ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில், சென்னை-கோவை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் இருந்து அதிகாலை 5.42 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் சென்னை கோட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்பட்டு சரியாக காலை 11.17 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைந்தது. சரியாக சென்னையில் இருந்து கோவைக்கு 5 மணி நேரம் 35 நிமிடங்களில் சென்றது. வந்தே பாரத் ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கமுடியும் என்றாலும், சோதனை ஓட்டத்திற்காக 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டது. சில ரெயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
குறைவான நிறுத்தம்
கோவையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.01 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அதன்படி, ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்ட நேரத்திற்குள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. மேலும், ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக பயண நேரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டம் வெற்றி
வந்தேபாரத் ரெயில் சேவை குறித்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா கூறியதாவது:-
தற்போது 8 பெட்டிகளுடன் வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு 22 நிமிடத்துக்கு முன்னதாக கோவை வந்து சேர்ந்தது. இந்த ரெயில் பெட்டிகள் அனைத்தும் முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 536 பயணிகள் பயணம் செய்யலாம். பிரதமர் மோடி 8-ந்தேதி இந்த ரெயிலை தொடங்கி வைக்கிறார்.
அப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு வரும்போது 5 இடங்களில் மட்டும் இந்த ரெயில் நிற்கும். 130 கிலோ மீட்டர் வேகத்துக்குள் இயக்கப்படும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலத்தில் செல்பி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு சோதனை ஓட்டத்தை தொடங்கிய வந்தே பாரத் ரெயில் காலை 9.15 மணிக்கு சேலம் வந்தடைந்தது. 4-வது நடைமேடையில் வந்த ரெயிலை கண்டதும் பயணிகளுக்கு வியப்பு ஏற்பட்டது. உடனே அவர்கள் ரெயிலை காண பிளாட்பாரங்களில் திரண்டனர். தங்களது குடும்பத்தினருடன் ரெயிலை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சேலம் வந்த ரெயிலில் ெரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ரெயிலில் ஏறி கோவை சென்றனர். ரெயில் 5 நிமிடம் நின்று 9.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.