மோசடிகள் பல ரகம்...அதில் இது புது ரகம்
மோசடிகள் பல ரகம்...அதில் இது புது ரகம்
போடிப்பட்டி,
இன்றைய காலகட்டத்தில் பல ரகமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் புகைப்படக்கலைஞர்களை குறிவைத்து புதிய ரக மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள்
முகத்தில் ஒரு மச்சம்..காலரில் ஒரு கைக்குட்டை...லுங்கிக்கு மேல் ஒரு பெல்ட்..இதுதான் ஒரு காலத்தில் திருடர்களுக்கான அடையாளங்களாக திரைப்படங்களில் காட்டப்பட்டது. ஆனால் கால மாற்றத்தால் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் வாழ்வியல் முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதுபோல திருடர்களின் உருவத்தில் மட்டுமல்லாமல் திருடும் முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் திருட்டு சம்பவங்களில் பல டிப்-டாப் ஆசாமிகள் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுவர்களில் துளையிட்டு திருடுவது, ஓட்டைப் பிரித்து திருடுவது, பூட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட உடலுழைப்புத் திருடர்கள் ஒருபுறம் கைவரிசை காட்டுகின்றனர். மறுபுறத்தில் நூதன முறையில் திருடும் கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.
அந்தவகையில் இணையதளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் இன்றைக்கு காவல் துறைக்கு சவாலாக உள்ளது. மேலும் ரூம் போட்டு யோசிப்பாங்களோ? என்று வியக்க வைக்கும் அளவுக்கு பல மோசடிகள் புதிது புதிதாக அரங்கேற்றப்படுகிறது.
எச்சரிக்கை
அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உடுமலை பகுதியிலுள்ள மளிகைக்கடைகளில் கோவில் அன்னதானத்துக்கு பொருள் வாங்குவதாகக் கூறி பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். அதுபோல தற்போது புகைப்படக்கலைஞர்களை குறி வைத்து மோசடி செய்யும் கும்பல் ஓன்று களமிறங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் புகைப்படம் மற்றும் வீடியோ (எக்ஸ்போஸ்) எடுத்துக் கொடுக்கும் கலைஞர்களை ஒரு கும்பல் தொடர்பு கொள்கிறது.
திருமணத்துக்கு போட்டோ, வீடியோ எடுக்க கலைஞர்கள் தேவை என்று அவர்களுக்கான தொகையும் பேசப்படுகிறது. வெளியூரில் விழா என்று அவர்களை சற்று தொலைவிலுள்ள ஏதோ ஒரு ஊருக்கு வரவழைக்கிறார்கள். அங்கு சென்றதும் அவர்களை வரவேற்கும் டிப்-டாப் ஆசாமி ஆடம்பரமான ஓட்டலில் குளுகுளு அறையில் தங்க வைக்கிறார். மறுநாள் அதிகாலையில் விழா என்பதால் நன்கு தூங்கி ஓய்வெடுக்கலாம் என்று கூறி அவர்களோடு அந்த நபரும் தங்கிக்கொள்கிறார். அதிகாலையில் எழுந்து பார்க்கும்போது அந்த டிப்-டாப் ஆசாமி விலை உயர்ந்த கேமரா உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் எஸ்கேப் ஆகி விடுகிறார்.
பல ஆண்டுகள் இரவு பகலாக கண் விழித்து, குருவி சேர்ப்பது போல சேர்த்து வாங்கிய அந்த புகைப்படக்கலைஞனின் விலை உயர்ந்த கேமராவோடு சேர்ந்து வாழ்க்கை குறித்த அவனுடைய கனவுகளும் காணாமல் போய் விடுகிறது. புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் புகைப்படக் கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உடுமலை பகுதிசமூக வலை தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.