வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்
வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்
திருப்பூர், ஜூன்.14-
திருப்பூரில் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 6-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று மாலை வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேரில் வீரராகவ பெருமாள் தேரில் பூதேவி, கனகவல்லி தாயார் உடனமர் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தோரோட்டத்தை திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
வாத்தியங்கள் இசைக்கப்பட்டன
முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என திரளானவர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வந்தனர். வாத்திய மேளங்கள் இசைக்க தேர் அசைந்தாடி வந்தது. தேருக்கு முன் பெண்கள் கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடி வந்தனர். நாதஸ்வர மேளதாளம், செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு குடிநீர், ஜூஸ், இனிப்பு, புளிசாதம், பொங்கல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்கினார்கள். பெருமாள் கோவில் அருகில் தொடங்கி ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய ஜவுளிக்கடை வீதி, கே.எஸ்.சி. பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு, பூக்கடை கார்னர் வழியாக மாலை தேர்நிலையை வந்தடைந்தது. தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதுபோல் காமராஜர் ரோட்டுக்கு தேர் வந்ததும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நெரிசல் தவிர்க்கப்பட்டது.
தூய்மைப்பணி
தேர் புறப்படுவதற்கு முன் வீதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். தனி குழுவை ஏற்படுத்தி தூய்மைப்பணியை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
----------
4 காலம்
திருப்பூரில் நடந்த வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம் (உள்படம்-ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள்).