வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம்


வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம்
x

அறந்தாங்கியில் வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

வீரமாகாளி அம்மன்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 14-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது.

மேலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் 2 நாட்கள் நடைபெறும்.

தேரோட்டம்

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் வீரமாகாளி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். மாலையில் 4.30 மணிக்கு பாலைவனம் ஜமீன் தாமரைச்செல்வம் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் திரளான பக்தர்கள் ேதரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் பக்தர்கள் தேங்காய், பழம், பூ வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். பெரியகடை வீதியில் தேர் வந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தேரை பக்தர்கள் பெரிய கடை வீதி, எம்.ஜி.ஆர். சிலை வழியாக இழுத்து வந்த ராஜேந்திர சோழீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் கோவில் எதிரே நிறுத்தினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்றும் தேர் இழுக்கப்படும்

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மாலை அங்கிருந்து தேர் இழுக்கப்பட்டு பழைய ஆஸ்பத்திரி ரோடு வழியாக, பெரிய பள்ளிவாசல், ஆவுடையார்கோவில் சாலை வழியாக கோவில் நிலையை வந்தடையும்.

பொதுவாக தேரோட்டத்தின் போது தேர் கோவிலை சுற்றி வரும். ஆனால் இங்கு கோவிலை தேர் சுற்றி வருவது இல்லை. வீரமாகாளி அம்மன் கோவில் தேர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பெரிய பள்ளிவாசலை சுற்றி வருகிறது.

முன்னதாக கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து கிராமமக்கள் தட்டுகளில் தேங்காய், பட்டு, பூ மாலை மற்றும் பொருட்கள் வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு சீர் கொண்டு வந்தனர்.

இதேபோல மண்டகபடிதாரர்களும் ஒன்றிணைந்து வாணவேடிக்கையுடன் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.


Next Story