வீராணம் சுரங்க திட்டத்தை அனுமதிக்கக்கூடாது -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


வீராணம் சுரங்க திட்டத்தை அனுமதிக்கக்கூடாது -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

வீராணம் சுரங்க திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்க திட்டங்களை கைவிடவேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக வீராணம் ஏரியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி கவலைப்படாமல் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களை பறித்து நிலக்கரி சுரங்கங்களை அமைக்க மத்திய சுரங்கத்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது.

வீராணம் பகுதியில் மட்டும் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தை மட்டுமின்றி, அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்தையும் அழிப்பதற்கு சமமான செயலாகும். வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் மட்டுமின்றி, 25 கி.மீ. சுற்றளவில் உள்ள நிலங்களும் அவற்றின் வளத்தை இழந்து மலடாகி விடும். அதனால், அப்பகுதியில் உள்ள 2 லட்சம் குடும்பங்களும் வாழ்வாதாரங்களை இழப்பது மட்டுமின்றி, வீடுகளையும் இழந்து அகதிகளாக வெளியேறவேண்டிய அவலநிலை ஏற்படும்.

ரத்து செய்ய வேண்டும்

என்.எல்.சி. நிறுவனம் அதன் விரிவாக்க திட்டங்களுக்காக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. என்.எல்.சி.யின் நிலப்பறிப்பு முயற்சிகளுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அப்பட்டமாக துணை போய்க்கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து மக்களையும், விவசாயிகளையும் திரட்டி பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதற்கு மாறாக கடலூர் மாவட்டத்தின் வளம் கொழிக்கும் தென் பகுதியையும் சீரழிக்கும் திட்டத்துக்காக ஆய்வு நடத்த அனுமதி அளித்திருக்கிறது. கடலூர் மாவட்ட மக்களின் நலன், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை, அவற்றில் அரசுக்கு அக்கறையில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

விவசாயத்தையும், விவசாயிகள் நலனையும் பறிகொடுத்துவிட்டு, எந்த தொழில் திட்டங்களையும் செயல்படுத்த தேவையில்லை. அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழலை கெடுக்கும் நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக விளைநிலங்களை பறிப்பதையும், பலி கொடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, வீராணம் நிலக்கரி சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். வீராணம் சுரங்க திட்டத்துக்காக எந்தவிதமான ஆய்வுகளையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடத்த அனுமதிக்கக்கூடாது. இதற்காக தாதுவளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். இல்லாவிட்டால், மக்களை திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story