வீராத்தாள் அம்மன் கோவில் திருவிழா
வீராத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தியில் வீராத்தாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். கோவில் திருப்பணி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திருவிழா நடைபெற வில்லை. தற்போது திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதால் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி காட்டாத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடத்தில் நவதானியங்களை நிரப்பி அதில் தென்னை பாலைகளை வைத்து அலங்கரித்து மது குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கையுடன் அய்யனார் கோவிலில் மது குடங்களை வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வீராத்தாள் அம்மன், அய்யனார் சுவாமி, கருப்பையா சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெண்கள் மா விளக்கு ஏற்றியும் பொங்கல் வைத்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் கிடாவெட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.