அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பசுமைப்பள்ளி திட்டம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமைப்பள்ளி திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
சட்டசபையில் அறிவித்தபடி பசுமைப்பள்ளி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 500 அரசு பள்ளிகளில் பசுமைக்குடில்கள், சூரியசக்தியில் இயங்கும் மோட்டார் போன்றவற்றின் துணையுடன் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக விளைவிக்கப்படும் காய்கறிகளை மதிய உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
காய்கறி தோட்டம்
காய்கறிகளை பயிரிடும் முறைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறி தோட்டங்கள் படிப்படியாக அமைக்கப்படும். இந்த திட்டம் மூலம் மாணவர்கள் வேளாண் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள முடியும்.
பசுமைப்பள்ளி திட்டத்தின்படி தொழிற்கல்வி பாடம் கற்றுத்தரப்படும். பள்ளிகளில் வேளாண் ஆய்வகம் அமைக்கப்படும். சிறிய குளத்துடன் கூடிய பசுமைக்குடிலும், பயிரிடுவதற்கான நிலமும் கொண்டது தான் இந்த வேளாண் ஆய்வகம். நாட்டிலேயே முதன்முறையாக தொழிற்கல்வியின் ஒருபகுதியாக வேளாண் ஆய்வகங்களும் தொடங்கப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விழாவில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, இணை இயக்குனர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா, துணைத்தலைவர் பாலச்சந்தர், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, துணைத் தலைவர் தளபதி, தி.மு.க. பேரூர் செயலாளர் கலைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வகுப்பறை கட்ட ரூ.240 கோடி ஒதுக்கீடு
விழாவை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் 1,540 பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 3,030 பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1,747 வகுப்பறைகள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடங்களில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படும். அதற்கான கட்டுமான பணிகளை வருகிற 27-ந் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த கட்டுமான பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைநின்ற மாணவர்கள்
மாணவ, மாணவிகள் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் படிக்கும் பள்ளிகளை கண்டறிந்து அதற்கு முன்னுரிமை அளித்து வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும். கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரம் மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து இடைநின்றுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் மீண்டும் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.