புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள் விற்பனை-2,850 கிலோ பழங்களும் விற்பனையானது
தர்மபுரி:
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகளும், 2,850 கிலோ பழங்களும் விற்பனையானது.
காய்கறிகள் விற்பனை
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையல் இட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளால் செய்யப்பட்ட உணவை குடும்பத்துடன் சாப்பிட்டு, விரதத்தை முடித்து கொள்வார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம். தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வர தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 42 டன் காய்கறிகள் விற்பனையானது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதேபோன்று ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 2,850 கிலோ பழங்களும் விற்பனையானது. இது மட்டுமல்லாமல் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வாழை இலை மற்றும் பூக்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
60 வகையான காய்கறிகள்
தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 132 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சுமார் 9 ஆயிரம் பேர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். 60 வகையான காய்கறிகள் நேற்று விற்பனைக்கு வந்தது. வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மஞ்சுநாதேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
நேற்று காலை திடீரென மழை பெய்ததால் உழவர் சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து காய்கறி, பழங்கள் விற்பனை சூடு பிடித்தது.