சாலைப்பணியை தடுத்து நிறுத்திய காய்கறி சந்தை வியாபாரிகள்


சாலைப்பணியை தடுத்து நிறுத்திய காய்கறி சந்தை வியாபாரிகள்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் காய்கறி சந்தை சாலையை தரமாக அமைக்கக்கோரி வியாபாரிகள் சாலைப்பணியை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் காய்கறி சந்தை சாலையை தரமாக அமைக்கக்கோரி வியாபாரிகள் சாலைப்பணியை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சாலைப்பணி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காய்கறி சந்தை சாலையை வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் விடப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக விளங்குகிறது. எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

தடுத்து நிறுத்தினர்

இந்தநிலையில் இந்த சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணி தொடங்கப்பட்டு கடந்த 2 தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த சாலைப் பணியானது, சாலையின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை அமைக்கப் படாமல் இருபுறமும் சில அடி தூரம் இடைவெளி விட்டு அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அப்படி அமைக்கும்போது மழை நீர் தேங்கி வெளியேற இயலாது, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியும், சாலை முழுவதும் பேவர் பிளாக் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நேற்று காய்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு பணியைத் தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில்தான் சாலை அமைக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு வியாபாரிகள் தரப்பில் ஏற்றுக்கொள்ளாததால் கலெக்டரிடம் புகார் அளித்து தீர்வு காண முடிவு செய்தனர்.



Next Story