காய்கறிகள் பதப்படுத்தும் நிலையத்துக்கு பூட்டுப்போட்ட விவசாயிகள்


காய்கறிகள் பதப்படுத்தும் நிலையத்துக்கு பூட்டுப்போட்ட விவசாயிகள்
x

வேடசந்தூர் அருகே காய்கறிகள் பதப்படுத்தும் நிலையத்துக்கு விவசாயிகள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

பதப்படுத்தும் நிலையம்

வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2½ கோடியில் காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தும் நிலையம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இருப்பினும் இந்த நிலையம் பயன்பாடின்றி கிடந்தது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை இங்கு பதப்படுத்த முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி பதப்படுத்தும் நிலையத்தின் முன்பு லாரியை நிறுத்தி அதில் இருந்து பஞ்சு பேரல்களை உள்ளே இறக்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அங்கு இருந்தவர்களிடம் பஞ்சு பேரல்களை இங்கு வைப்பது குறித்து கேட்டனர். அப்போது காய்கறிகள் பதப்படுத்தும் நிலையத்தை தனியார் நூற்பாலை நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனத்தின் பஞ்சு பேரல்களை இங்கு சேமித்து வைப்பதாகவும் தெரிவித்தனர்.

பூட்டுப்போட்டனர்

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலானது. இருப்பினும் விவசாயிகளுக்கு பயன்பட வேண்டிய பதப்படுத்தும் நிலையம், தனியாருக்கு வாடகைக்கு விட்டது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

இதையடுத்து சேனன்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் நேற்று பதப்படுத்தும் நிலையத்திற்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தனியாருக்கு வழங்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, பதப்படுத்தும் நிலையத்தை மீண்டும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story