ரூ.1½ கோடிக்கு காய்கறிகள் விற்பனை
உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.
ரூ.1½கோடிக்கு விற்பனை
தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத்துறையின் சார்பில் உடுமலை கபூர்கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம் 1,832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 810 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 220-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை பொதுமக்கள் 68 ஆயிரத்து 366 பேர் வாங்கி பயனடைந்தனர்.
காய்கறிகள் வரத்து
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதம் உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் எண்ணிக்கை 31 பேர் குறைவாக இருந்தநிலையில், காய்கறிகள் வரத்து 3 ஆயிரத்து 65 கிலோ அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகை ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 815 கூடுதலாக இருந்தது.
காய்கறிகளை வாங்குவதற்கு கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதம் பொதுமக்கள் 1,600 பேர் கூடுதலாக வந்திருந்தனர்.
காய்கறிகள் விலை
உடுமலை உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.16 முதல் ரூ.28 வரைக்கும், வெண்டைக்காய் ரூ.18 முதல் ரூ20 வரைக்கும், தக்காளி ரூ.7 முதல் ரூ.12 வரைக்கும், அவரைக்காய் ரூ.40 முதல் ரூ.52 வரைக்கும், புடலங்காய் ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும், பீர்க்கங்காய் ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும், பாகற்காய் ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும், பச்சை மிளகாய் ரூ.30 முதல் ரூ.48 வரைக்கும்,
சின்னவெங்காயம் ரூ.20 முதல் ரூ.28 வரைக்கும், முருங்கைக்காய் ரூ.35 முதல் ரூ.38 வரைக்கும், உருளைக்கிழங்கு ரூ.35 முதல் ரூ.54 வரைக்கும், காரட் ரூ.50 முதல் ரூ.62 வரைக்கும், பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.40 வரைக்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.58-க்கும், முட்டைக்கோஸ் ரூ.40 முதல்ரூ.45 வரைக்கும் விற்கப்பட்டது. வாழைக்காய் ரூ.30 முதல் ரூ.38 வரைக்கும், கொய்யாப்பழம் ரூ.30முதல் ரூ.50 வரைக்கும், எலுமிச்சைபழம் ரூ.60 முதல் ரூ.65 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.