தர்மபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனம்-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரி:
தர்மபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி வாகனத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கண்காட்சி வாகனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி வாகனம் தொடக்க விழா தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, விழிப்புணர்வு கண்காட்சி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி முன்னிலை வகித்தார்.
விழாவில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு உறுதிமொழி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
விழிப்புணர்வு
வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலைபாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலை துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனம் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உயிரிழப்புகள்
சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும். மேலும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலை விதிகளை கடைபிடிப்பது மிக முக்கியமானதாகும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் ஜீவரத்தினம், ரவிலட்சுமணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, துணை மேலாளர்கள் மோகன்குமார், ராஜராஜன், அரவிந்தன், தமிழரசன், ராஜா, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.