கண்ணுக்கு தெரியாத வேகத்தடைகளால் அதிகரிக்கும் வாகன விபத்துகள்
மசினகுடி-ஊட்டி நெடுஞ்சாலையில் கண்ணுக்கு தெரியாத வேகத்தடைகளால் வாகன விபத்துகள் அதிகரிக்கிறது. எனவே அடையாள குறியீடு போட வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்
மசினகுடி-ஊட்டி நெடுஞ்சாலையில் கண்ணுக்கு தெரியாத வேகத்தடைகளால் வாகன விபத்துகள் அதிகரிக்கிறது. எனவே அடையாள குறியீடு போட வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேகத்தடைகள்
கர்நாடகா, கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர், முதுமலை வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். பெரும்பாலும் கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை, மசினகுடி, கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு செல்கின்றனர். 36 கொண்டை ஊசி வளைவு கொண்ட ஆபத்தான மலைப்பாதை என்பதால் விபத்துகள் ஏற்படாமல் இருக்க ஊட்டியில் இருந்து மசினகுடி வருவதற்கு போலீசார் அனுமதி வழங்குவதில்லை.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் வனவிலங்குகள் சாலையை அடிக்கடி கடந்து செல்வதால் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மசினகுடியில் இருந்து வாழைத்தோட்டம் வழியாக கல்லட்டி மலைப்பாதைக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் சில இடங்களில் மட்டும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
கீழே விழுந்து படுகாயம்
ஆனால் மீதமுள்ள இடங்களில் வேகத்தடைகள் இல்லாததால் சிலர் தங்களது வாகனங்களை அதி வேகமாக ஓட்டி வந்தனர். இதனால் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதுமலை வனத்துறையினரின் பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக வேகத்தடைகள் அமைத்தனர்.
ஆனால் அதில் அடையாள குறியீடு வரையப்படவில்லை. இதை அறியாத வெளியூர் பயணிகள் வாகனங்களில் வரும்போது தொடர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். நேற்று காலை 8 மணிக்கு மசினகுடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வாழைத்தோட்டம் பகுதியில் புதிதாக அமைத்திருந்த வேகத்தடையில் திடீரென சக்கரம் ஏறி இறங்கியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கண்ணுக்கு தெரியவில்லை
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
மசினகுடி-ஊட்டி நெடுஞ்சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அடையாள குறியீடு வரையப்படாததால் வாகனங்களில் வரும்போது வேகத்தடைகள் இருப்பது கண்ணுக்கு தெரிவதில்லை. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.