மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; அரசு பஸ் டிரைவர் சாவு
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பஸ் டிரைவர் விபத்தில் சாவு
நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46), அரசு பஸ் டிரைவர். இவர் செட்டிகுளம் பணிமனை தொ.மு.ச. பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு நடராஜன் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு அவரை இறக்கி விட்டு மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டார். கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒரு வாகனம் நடராஜனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது நடராஜன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீஸ் விசாரணை
பலியான நடராஜன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் இரவு நேரம் என்பதால் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் தெளிவாக இல்லை என்று போலீசார் கூறினர். மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.