கல்லட்டி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி


கல்லட்டி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி
x

மாயாறு தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், கல்லட்டி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, மசினகுடி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

மாயாறு தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், கல்லட்டி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, மசினகுடி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாயாறு தரைப்பாலம்

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் பழமையான பாலம் பழுதடைந்த நிலையில், அதை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் வேறு பாதையில் உள்ள தரைப்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாயாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலத்தில் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இதனால் மசினகுடி பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவரும் கூடலூருக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மசினகுடி பகுதியில் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து வியாபாரிகள், ஜீப் மற்றும் லாரி ஓட்டுனர்கள், விடுதி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து உள்ளனர்.

கல்லட்டி வழியாக...

சுதந்திர தினம் உள்பட தொடர் விடுமுறை வருவதால் இங்குள்ள விடுதிகளை சுற்றுலா பயணிகளை, முன்கூட்டியே பதிவு செய்து காத்திருக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வந்தால்தான் வியாபாரிகள், ஓட்டுனர்கள், விடுதி நிர்வாகத்தினர், விடுதியில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவரும் பிழைக்க முடியும்.

எனவே தலைகுந்தாவில் இருந்து கூடலூர் வழியாக மசினகுடிக்கு திருப்பி விடப்படும் வாகனங்கள் தெப்பக்காடு கடந்து வர முடியாத சூழலில் உள்ளது. எனவே தெப்பக்காடு பகுதியில் புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை கல்லட்டி வழியாக மசினகுடிக்கு கார், ஜீப் போன்ற வாகனங்களை மட்டுமாவது அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோரிக்கை மனு

இதுகுறித்து மசினகுடி மக்கள் கூறியதாவது:-

வெளிமாவட்ட ஓட்டுனர்கள், கல்லட்டி சாலையின் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் கல்லட்டி சோதனைச்சாவடியில் ஒரு போலீஸ்காரர் மற்றும் மெக்கானிக் போன்றவர்களை தற்காலிகமாக பணி அமர்த்தி வாகனங்களை சோதனை செய்த பிறகு அனுமதிக்கலாம். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே மசினகுடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல்லட்டி வழியாக வாகன போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Next Story