பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
நாகை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
நாகை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திடீர் தீ
நாகை-நாகூர் சாலையில் காடம்பாடி பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் இயங்கிவந்த வெளிப்பாளையம் போலீஸ் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை கோர்ட் வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், இரு சக்கர வாகனங்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
வாகனங்கள் எரிந்து நாசம்
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த நாகை தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் விட்டு அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த திடீர் தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.