சுங்கச் சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அணிவகுத்து நின்றன
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் விரைந்து சுங்கச்சாவடியை கடக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு பாஸ்ட் ட்ராக் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் வாகனங்கள் ஒரு நிமிடத்தில் சுங்கச்சாவடியை கடந்து சென்றன. இந்த நிலையில் நேற்று பகல் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் அவசர நிமித்தமாக காரில் பயணம் செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரிதவித்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்வதென்றால் பயணம் செய்பவர்களுக்கு கடும் நெருக்கடியாக இருந்து வருகிறது. சாதாரண நாட்களில் ஒரு நிமிடத்தில் சுங்கச்சாவடியை கடக்க நேர்ந்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.
சாலை அமைக்கும் பணி
அந்த அளவிற்கு வேலூரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், ஆம்பூரை நோக்கி செல்லக்கூடிய வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. இது குறித்து சுங்கச்சாவடி மேலாளரிடம் கேட்டதற்கு பாஸ்ட் ட்ராக் நடைமுறைக்கு வந்த பிறகு வாகனங்கள் ஒரு நிமிடம் கூட சுங்கச்சாவடியில் நிற்பதில்லை. ஆனால் கடந்த ஒரு மாதமாக சுங்கச்சாவடியில் சுங்க வரி வசூல் செய்யும் பூத்கள் புனரமைப்பது, தார் சாலையாக இருந்ததை சிமெண்டு சாலையாக மாற்றி அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு சில வரி வசூல் செய்யும் பூத்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் சற்று விரைவாக செல்ல தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலைமை இன்னும் ஒரு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிவித்தார்.