மலைப்பாதையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
நீலகிரியில் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மலைப்பாதையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
குன்னூர்
நீலகிரியில் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மலைப்பாதையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் நேற்று கோடை விழா தொடங்கி உள்ளது. கோடை விடுமுறையை கழிக்கவும், குளுகுளு காலநிலையை அனுபவிக்கவும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் குன்னூரில் இருந்து கோத்தகிரி வழியாக வாகனங்கள் மேட்டுப்பாளையம் செல்கின்றன. மேட்டுப்பாளையத்தில் குன்னூர் வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வருகின்றன. சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, நிரம்பி வழிகிறது.
ேபாக்குவரத்து நெரிசல்
கோடை விழாவையொட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் நேற்று குன்னூர் லெவல் கிராசிங்கில் போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி, மாற்றுப்பாதையில் அனுப்பு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக குன்னூர் பஸ் நிலைய பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வாகனங்களிலேயே காத்து கிடக்கின்றனர். அவர்கள் திட்டமிட்ட படி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாத நிலை உள்ளது. இதேபோல் ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டி, பைக்காரா படகு இல்லங்களில் சவாரி செய்து மகிழ்ந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, போலீசார் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.