நெல் மூட்டைகளுடன் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு


நெல் மூட்டைகளுடன் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கத்தால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. நெல் மூட்டைகளுடன் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வருகிற 22-ந் தேதி வரை கொண்டு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் அறுவடை சமயங்களில் அதிகமான நெல் மூட்டைகள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

நெல்முட்டைகள் எடை போட்டு வேறு சாக்குகளில் மாற்றி அதனை வாகனங்களில் ஏற்றிய பிறகுதான், மீண்டும் கொள்முதல் செய்து நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க முடியும்.

வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

கடந்த ஒருவாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பணியாளர்கள் பணி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சாக்குகளுக்கு மாற்றப்படாமலும், சாக்கு மாற்றப்பட்ட நெல்முட்டைகள் வாகனங்களில் ஏற்றப்படாமலும் தேங்கியது. இதனிடையே நேற்றும் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை டிராக்டர், மினி லாரி, சரக்கு வாகனங்களில் ஏற்றி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வந்தனர். ஆனால் அதனை உள்ளே வைக்க இடம் இல்லாததால் நெல் முட்டைகளுடன் வந்த வாகனங்களை ஒருங்குமுறை விற்பனை கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் விரைந்து வந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் வந்த வாகனங்கள் அனைத்தும், செஞ்சி மந்தைவெளி மைதானத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

அதிகாரிகள் அலட்சியம்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த மைதானத்தில் மொட்டை வெயிலில் எங்களை காக்க வைத்து விட்டார்கள். எங்களது நெல் மூட்டைகளை எப்போது கொள்முதல் செய்வார்கள் என்றே தெரியவில்லை. 1 அல்லது 2 நாட்கள் இங்கேயே இருந்தால் தேவையில்லாமல் வாகனங்களுக்கும் வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள், முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நெல் மூட்டைகளை கொண்டு வந்திருக்க மாட்டோம். இனி வரும் காலங்களிலும் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றனர்.

22-ந் தேதி வரை வரவேண்டாம்

ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வேலன் கூறுகையில், கடுமையான வெயில் தாக்கத்தால் தொழிலாளர்கள், பணியாளர்கள் பணி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சாக்குமாற்றி அப்புறப்படுத்தும் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 22-ந் தேதி வரை விவசாயிகள் விற்பனைக்கு நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என்றார்.


Next Story