நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வாகனங்கள்
திருத்துறைப்பூண்டியில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உப்பு, காய்கறி கொண்டு செல்லப்படுகிறது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளும், 92 கிராமங்களும் உள்ளன. இந்த பகுதி மக்கள் தினசரி தங்கள் தேவைக்காக திருத்துறைப்பூண்டி நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும் திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். அதேபோல வேதாரண்யத்தில் இருந்து உப்பு, காய்கறிகள், பூ வகைகள் உள்ளிட்டவைகள் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த வாகனங்கள் செல்ல திருத்துறைப்பூண்டியில் ஒரு வழி பாதை மட்டுமே உள்ளது. ரிங் ரோடு இல்லாததால் ெரயில்வே சாலையை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூழல் உள்ளது.
அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்
தற்போது நாகை சாலையில் இருந்து திருவாரூர் சாலையை இணைக்கும் புறவழிச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருத்துறைப்பூண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி, நாகூர், நாகை மற்றும் கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ஒரு வழி பாதையை பயன்படுத்த வேண்டிய நிலைய உள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம், அகத்தியம்பள்ளி இடையே அகல ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி ஜல்லி மற்றும் இதர தளவாட பொருட்கள் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் செல்வதால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.
மேம்பாலம் அமைக்க வேண்டும்
இதன்காரணமாக திருத்துறைப்பூண்டியில் ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறை ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன.
அவசரமா ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.