அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து வாகன பிரசாரம்
திருமருகல் பகுதிகளில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து வாகன பிரசாரம்
திட்டச்சேரி:
நாகை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இந்த பிரசார வாகனம் நேற்று திட்டச்சேரி வந்தது. தொடர்ந்து பிரசார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சி திட்டச்சேரி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டச்சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு வரவேற்றார். இதில் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றை விளக்கி பிரசாரம் செய்யப்பட்டது. இதில் ஆசிரியர்கள் நடராஜன், பிரபாகரன், பொற்கொடி, அகல்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார். தொடர்ந்து வாகன பிரசாரம் திருமருகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்தது.