நாகையில் 3 நாட்களாக சதம் அடித்த வெயில்
அக்னி நட்சத்திரம் முடிந்தும் நாகையில் 3 நாட்களாக சதம் அடிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நாகப்பட்டினம்:
அக்னி நட்சத்திரம் முடிந்தும் நாகையில் 3 நாட்களாக சதம் அடிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த மாதம் 4-ந்தேதி முதலே வெயில் சுட்டெரித்தது. எனினும், அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் முதல் 2 வாரம் வெப்பம் தணிந்தே காணப்பட்டது.இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்து 5 நாட்களாகியும் கடந்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
சுட்டெரிக்கும் வெயில்
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகையில் கடந்த 3 நாட்களாக வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்து செல்கின்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலையில்முக்காடு போட்டு செல்கின்றனர். இதுதவிர அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குளிர்பானங்கள் விற்பனை படுஜோர்
வெயில் சுட்டெரிப்பதால் தங்களை தற்காத்து கொள்ள சாலை ஓரத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் இளநீர், சர்பத், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.இதனால் சாலையோரத்தில் ஏராளமான குளிர்பான கடைகள் உதயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் பகல் நேரத்தில் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் குளிர்பான விற்பனை படுஜோராக நடக்கிறது.
பொதுமக்கள் அவதி
பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்படுகிறது. இதனால் மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகையில் தொடர்ந்து 3 நாட்களாக வெயில் சதம் அடிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.