வேளாங்கண்ணி மாத ஆலய திருவிழா: காரைக்கால்-தஞ்சை ரெயில் திருச்சி வரை நீட்டிப்பு


வேளாங்கண்ணி மாத ஆலய திருவிழா: காரைக்கால்-தஞ்சை ரெயில் திருச்சி வரை நீட்டிப்பு
x

வேளாங்கண்ணி மாத ஆலய திருவிழாவையொட்டி காரைக்கால்-தஞ்சை ரெயில் வருகிற 8-ந்தேதி வரை திருச்சிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி காரைக்கால்-தஞ்சை சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 8-ந்தேதி வரை திருச்சிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காரைக்காலில் மாலை 6.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் தஞ்சைக்கு இரவு 8.55 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே ரெயில் இரவு 9 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இதுபோல் இரவு 10.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்படும் ரெயில் தஞ்சைக்கு காலை 5.30 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 7 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இதுதவிர திருச்சி-வேளாங்கண்ணி இடையேயும், வேளாங்கண்ணி-நாகை இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருச்சியில் மதியம் 12 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.50 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். அங்கிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.45 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த சிறப்பு ரெயில் நாகை, திருவாரூர், கொரடாச்சேரி. நீடாமங்கலம், தஞ்சை, பூதலூர், திருவெறும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் வேளாங்கண்ணி-நாகை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வேளாங்கண்ணியில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு நாகையை சென்றடையும். அங்கிருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.55 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். பின்னர் மீண்டும் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 2.05 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 2.25 மணிக்கு நாகையை வந்தடையும்.

அங்கிருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.25 மணிக்கு மீண்டும் வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரெயில்கள் அனைத்தும் இன்று முதல் 8-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்.


Next Story