வேலூர் விமான நிலைய பணிகள் கைவிடப்பட்டதா?
நிதிஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வேலூர் விமான நிலைய பணிகள் கைவிடப்பட்டதாக மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிதிஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வேலூர் விமான நிலைய பணிகள் கைவிடப்பட்டதாக மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையம்
வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகள் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினல் கட்டிடம், தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
இதன் நடுவே இருந்த தார்வழி சாலையும் விமான நிலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட விமான நிலையம் செயல்படுமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பல மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. டெர்மினல் கட்டிடமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. பல இடங்களில் குப்பைகள் நிறைந்து கைவிடப்பட்ட விமான நிலையம் போன்று காட்சியளிக்கிறது.
நடைமுறை சிக்கல்
இந்த விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதை கையகப்படுத்தி மாநில அரசு விமான நிலைய ஆணையரகத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் நிலத்துக்கு உரிய இழப்பீடு கொடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே விமான நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கு பணியாற்றிய பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதேவேளையில் வேலூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகள் வருகை இருக்குமா? என்றும், வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் செல்லும் நேரமும், விமான நிலையத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வெளியே வரும் நேரமும் சமமாக இருக்க வாய்ப்புள்ளதால் சென்னை-வேலூருக்கு விமானத்தில் பயணிகள் பயணிப்பார்களா? என்ற கேள்வியையும் மையமாக கொண்டு நிதி ஒதுக்குவது தேவையற்றது என்று மத்திய மாநில அரசுகள் கருதி, நிதி ஒதுக்க தாமதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் நினைக்கின்றனர்.
விடைகிடைக்குமா?
எதுவாயினும் பல கோடி ரூபாய் செலவு செய்த விமான நிலையத்தை பயன்பாட்டு கொண்டுவரவேண்டும் என்றும் அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து பல்வேறு கேள்விகளுக்கு விடை கொடுக்க வேண்டும் என்பதே வேலூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.