கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்ட எல்லை வழியாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் முறையாக சோதனை செய்கிறார்களா என்று பார்வையிட்டார்.
தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் அனைத்து வாகனங்களையும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வாகன சோதனை
அதன்பின்னர் அவர் சித்தூர் பஸ் நிறுத்தம், தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையை திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் வாகன சோதனையும் மேற்கொண்டார்.
அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்றும், இரவுநேர பயணம் குறித்தும் கேட்டறிந்தார்.
நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் இரவு ரோந்து செல்லும் போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு ரோந்து சென்றார்களா என்று சோதனை செய்தார். ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மெத்தன போக்குடன் செயல்படக்கூடாது. தங்களின் பணியை சரியாக செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை அவ்வப்போது தணிக்கை செய்யும்படி ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மனோகரனுக்கு உத்தரவிட்டார்.
தெற்கு போலீஸ் நிலையம்
அதைத்தொடர்ந்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு இரவு நேர பணியில் இருக்கும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்றவழக்கு கோப்புகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், இன்ஸ்பெக்டர் சியாமளா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.