தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கடையை காலி செய்வது தொடர்பாக தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்ற 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர்:
கடையை காலி செய்வது தொடர்பாக தகராறு வேலூரில் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டு நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.
கடை தகராறு
வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 31). இவர் வேலூர் நேஷனல் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் குடோனில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நந்தினி.
மக்கான் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆலீஸ்தேவி என்பவர் மளிகை கடை வைத்திருந்தார். அந்த கடைக்கு வாடகை மற்றும் மின்சார கட்டணத்தை அவர் சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சமுதாய கூடத்தின் பொறுப்பாளர்களான அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் (30), விக்னேஷ் (31) ஆகியோர் மளிகை கடையை காலி செய்யும்படி ஆலீஸ்தேவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
குத்திக்கொலை
ஆலீஸ்தேவி இதுபற்றி பாண்டியனிடம் தெரிவித்தார். அதையடுத்து அவர் இதுகுறித்து நிர்மல்குமார், விக்னேஷிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி இரவு நிர்மல்குமார், விக்னேஷ் ஆகியோர் செல்போனில் பாண்டியனை தொடர்பு கொண்டு மக்கான் பகுதியில் உள்ள புதிய மீன்மார்க்கெட் அருகே வரவழைத்தனர்.
அங்கு வைத்து நிர்மல்குமார், விக்னேஷ் மற்றும் அவர்களுடைய நண்பர் சரண்ராஜ் (31) ஆகியோர் பாண்டியனிடம் மளிகை கடையை காலி செய்யும் விவகாரத்தில் தலையிட கூடாது என்று கூறினர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த 3 பேரும் பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
3 பேர் கைது
இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து நிர்மல்குமார், விக்னேஷ், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் சிவப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார்.
தீர்ப்பு
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். அதில், பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நிர்மல்குமார், விக்னேஷ், சரண்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் பலத்த காவலுடன் வேனில் அழைத்து சென்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.