வேலூர் மருந்து கடை உரிமையாளர் கிணற்றில் பிணமாக கிடந்தார்
ஆம்பூர் அருகே பெட்ரோலை ஊற்றி மோட்டார் சைக்கிளை எரித்த வேலூர் மருந்து கடை உரிமையாளர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே பெட்ரோலை ஊற்றி மோட்டார் சைக்கிளை எரித்த வேலூர் மருந்து கடை உரிமையாளர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
மோட்டார் சைக்கிள் எரிப்பு
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37). இவரது மனைவி கிருத்திகா.
இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. மாதனூர்-ஒடுகத்தூர் சாலையில் செல்வகுமார் மருந்து கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு செல்வகுமார் மாதனூர் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திடீரென அவர் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
கிணற்றில் பிணம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் எரிந்த இடத்தில் இருந்து சிறிது ெதாலைவில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கிணற்றில் இருந்த உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தவர் மருந்து கடை உரிமையாளர் செல்வகுமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.