வேலூர் மாங்காய் மண்டி ரெயில்வே கேட் மூடல்
தண்டவாள பராமரிப்பு காரணமாக வேலூர் மாங்காய் மண்டி ரெயில்வே கேட் மூடப்பட்டது.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு இடைப்பட்ட சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திலான பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இப்பணிகள் நேற்று வேலூர்-பெங்களூரு சாலை மாங்காய் மண்டி அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் நடைபெற்றது. அதன் காரணமாக இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சிமெண்டு கம்பங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கு புதிதாக சிமெண்டு கம்பங்களை பொருத்தினர். மேலும் தண்டவாளத்தில் ஜல்லிகற்கள் சரியான அளவில் உள்ளதா?, இரும்பு கம்புகளின் இணைப்புகளில் போதுமான கிரீஸ் காணப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். மாங்காய் மண்டி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வேலூரில் இருந்து கொணவட்டம், சேண்பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து கொணவட்டம் வழியாக செல்லும் பஸ்கள் வேறு வழியாக மாற்றி விடப்பட்டன.