வேலூா் நேதாஜி மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை திடீர் சரிவு
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் விலை திடீரென சரிந்து ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் விலை திடீரென சரிந்து ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேதாஜி பூ மார்க்கெட்
வேலூர் நேதாஜி மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை விற்பனை பூக்கடைகள் உள்ளன. நேதாஜி மார்க்கெட்டிற்கு பெங்களூரு, வி.கோட்டா, குப்பம், கடப்பா, குண்டூர் ஓசூர், சேலம், தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 10 முதல் 12 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மார்க்கெட்டில் சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகமாக காணப்படும். பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது. கடந்த 12-ந் தேதி ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று மற்ற பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது.
மல்லிகை பூ கிலோ ரூ.1,500
இந்த நிலையில் நேதாஜி பூ மார்க்கெட்டிற்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து மல்லிகை பூ அதிகளவு வந்துள்ளதால் அவற்றின் விலை தற்போது சிறிது குறைந்துள்ளது. கடந்த 12-ந் தேதி கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்ட மல்லிகை பூ விலை குறைந்து நேற்று ரூ.1,500 வரை விற்பனையானது.
அதேபோன்று ஜாதிமல்லி விலை சிறிது உயர்ந்து ரூ.1,400-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், காக்கடைமல்லி ரூ.700-க்கும், சாமந்தி ரூ.100 முதல் ரூ.150 வரையும், ரோஜா ரூ.220 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை ஆனது.
முல்லை பூவிளைச்சல் இல்லாததால் அவற்றின் வரத்து கடந்த சில வாரங்களாக இல்லை. பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் குண்டூரில் இருந்து மல்லிகை பூ வந்ததால் சிறிதளவு விலை குறைந்துள்ளது என்று வேலூர் நேதாஜி பூ மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.