வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம்
வேலூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கான ஏலம் நடந்தது.
வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 87 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஓய்வறை உள்ளிட்டவைகளுக்கு 12 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 75 கடைகளுக்கு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 8 கடைகளும், ஜூன் மாதம் 7 கடைகளும் ஏலம் விடப்பட்டது.
இதையடுத்து மீண்டும் ஏலம் விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. காலை 11.30 மணி அளவில் மனுபெட்டி உதவி ஆணையர் சுப்பையா முன்னிலையில் திறக்கப்பட்டது. இதில் ஒரு கடைக்கு ஒருவர் மட்டுமே மனு அளித்திருந்தார். அவர் மற்றும் நேரடியாக கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த 2 பேர் என 3 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 3 கடைகள் ஏலம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடைக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப ஏலம் எடுத்தவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணி படிப்படியாக நடைபெறும். இதுவரை 18 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. மீதம் உள்ள கடைகளும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.