வேலூர் ஓட்டேரி பூங்காவை தூய்மைப்படுத்தினர்
மாநகராட்சி ஊழியர்களுடன், பொதுமக்கள் இணைந்து வேலூர் ஓட்டேரி பூங்காவை தூய்மைப்படுத்தினர்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 2,4-வது சனிக்கிழமைகளில் எனது நகரம் எனது பெருமை, எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் ஒவ்வொரு பகுதியாக தூய்மைப்படுத்த வேண்டும். நகரத்தை தூய்மையாக வைப்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மை பணியில் அப்பகுதி மக்கள் விரும்பினால் இணைந்து செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது
அதன்படி வேலூர் மாநகராட்சி சார்பில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி பூங்காவை பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது. முன்னதாக இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு மாநகர் நலஅலுவலர் கணேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பாரத இயக்க ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் தூய்மையான நகரத்தை உருவாக்குவது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து ஓட்டேரி பூங்கா, நடைபாதை மற்றும் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஓட்டேரி பூங்கா வளாகத்தில் காணப்பட்ட சுமார் 30 கிலோ தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.