வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் - கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிப்பாய் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வேலூர்,
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு 216-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணியளவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறறது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.