வேங்கைவயல் சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
ஒரு நபர் ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந்தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதிலும் விசாரணை நடைபெற்று வருகிற நிலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு பொறுப்பு தலைமை ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள், சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும் வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று அவர் விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு நபர் ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.