ஈரோட்டில் துணிகரம்ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டுகாரையும் ஓட்டிச்சென்ற மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோட்டில் தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 4 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகிறாா்கள்.
ஈரோட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் 4 பவுன் நகையை திருடிவிட்டு காரையும் ஓட்டிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தலைமை ஆசிரியர்
ஈரோடு செங்குந்தர்நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 73). அரசு பள்ளிக்கூட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சென்னை குரோம்பேட்டையிலும் சொந்த வீடு உள்ளது. இதனால் அடிக்கடி அவர் சென்னைக்கு சென்று வருவது வழக்கம். அதுபோல் கடந்த 4-ந் தேதி ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவர் வீட்டு கதவை பூட்டிவிட்டு தனது காரை வீட்டுக்கு முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராமச்சந்திரனின் கார் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை கடந்து சென்றதாகவும், அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன.
காரில் தப்பிச்சென்றனர்
பீரோவில் 4 பவுன் நகை வைக்கப்பட்டு இருந்ததாக ராமச்சந்திரன் போலீசாரிடம் தெரிவித்தார். எனவே 4 பவுன் நகையை திருடிய மர்மநபர்கள், தப்பி செல்வதற்காக வீட்டின் முன்பு இருந்த காரையும் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, காரை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளதா எனவும் பார்வையிட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் வீடு புகுந்து நகையை திருடிய மர்மநபர்கள் காரில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.