மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்ற தீர்ப்பு ரத்து:- சிறுமலை வனப்பகுதியை பாதுகாப்பது அவசியம் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்ற தீர்ப்பு ரத்து:- சிறுமலை வனப்பகுதியை பாதுகாப்பது அவசியம் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சிறுமலை வனப்பகுதியை பாதுகாப்பது அவசியம் என்றும், அங்குள்ள நிலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என மாவட்ட கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சிறுமலை வனப்பகுதியை பாதுகாப்பது அவசியம் என்றும், அங்குள்ள நிலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என மாவட்ட கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுமலை வனப்பகுதி

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை விராலிப்பட்டி பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தரிசு நிலமாக அரசு அறிவித்தது. பின்னர் இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனம் என்றும் வகைப்படுத்தியது. ஆனால் இந்த பகுதியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

அவற்றை வனத்துறைக்கு சொந்தமானது என அரசு அறிவித்தது ஏற்புடையதல்ல என்று கூறி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கக்கோரி மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தின்போது சிறுமலை பகுதியில் உள்ள ஏராளமான நிலங்களை மீனாட்சி கோவிலுக்கு அவர் தானமாக வழங்கினார் என கூறப்பட்டது.

கோவிலுக்கு ஆதரவாக சிறுமலை தென்மலை தோட்ட விவசாயிகளும் மதுரை மாவட்ட கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திருமலை நாயக்கர் வழங்கிய நிலங்கள் தற்போது எங்களது அனுபவத்தில் உள்ளன. இதற்காக கோவிலுக்கு ஆண்டுதோறும் உரிய தொகையை செலுத்தி வருகிறோம் என கூறியிருந்தனர்.

கோவில்நிலம் என தீர்ப்பு

இந்த விவகாரத்தில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தோட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை-திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சிறுமலை பகுதியில் உள்ள நிலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்து நிரூபிக்கப்படவில்லை.

சிறுமலையை பாதுகாப்போம்

சிறுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். எனவே மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தோட்ட விவசாயிகள் சங்கத்துக்கு ஆதரவாக மாவட்ட கோர்ட்டு அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு பெற மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விரும்பினால், அரசிடம் முறையிட்டு உரிய நிவாரணத்தை பெறலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story