கூடலூர் அருகே கொட்டும் பனியில் விடிய,விடிய காமன் பண்டிகை கொண்டாட்டம்-திரளான கிராம மக்கள் பங்கேற்பு


கூடலூர் அருகே கொட்டும் பனியில் விடிய,விடிய காமன் பண்டிகை கொண்டாட்டம்-திரளான கிராம மக்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 March 2023 12:30 AM IST (Updated: 13 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கொட்டும் பனியை பொருட்படுத்தாது விடிய விடிய காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே கொட்டும் பனியை பொருட்படுத்தாது விடிய விடிய காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காமன் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் இன்று வரை தங்களது பாரம்பரிய பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர். தொடர்ந்து பல தலைமுறைகளாக பல்வேறு கலாசார பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். கூடலூர் அருகே பாண்டியாறு ஆமைக்குளத்தில் ரதி - மன்மதன் கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 23-ம் தேதி காமன் பண்டிகை விழா தொடங்கியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். கடந்த சில தினங்களாக ரதி - மன்மதன் வேடமிட்டு வீதி உலா வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு காமன் பண்டிகையையொட்டி ரதி - மன்மதன் திருமணம் நடைபெற்றது.

பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள்

தொடர்ந்து தேர் ஊர்வலம், மொய் விருந்து உபச்சாரம், மன்மதனுக்கு குறி சொல்லுதல் நிகழ்ச்சி, சிவபெருமான் தியானத்தில் அமர்தல், தட்சன் யாகம், முனீஸ்வரர். அகோர வீர புத்திரன் வருகை, மன்மதன், தட்சனை எரித்தல் உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது.

இதை உணர்த்தும் வகையில் பக்தர்கள் ரதி - மன்மதன் மற்றும் சிவபெருமான் உள்பட பல்வேறு வேடங்களில் விடிய விடிய நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஆமைகுளம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இது குறித்து ரதி - மன்மதன் திருக்கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:- சிவபெருமான்- பார்வதி கைலாயத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் பார்வதியின் தந்தை தட்சன் சிறப்பு யாகம் நடத்துகிறார். இதில் சிவபெருமானை அழைக்காமல் பார்வதியை மட்டும் தட்சன் அழைப்பு விடுக்கிறார். இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். தொடர்ந்து இந்திரலோகத்தில் உள்ள தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தும் படலங்கள் தொடர்கிறது.

பாரம்பரிய நிகழ்ச்சிகள்

இதேபோல் அழைக்காமல் சிவபெருமான் வரவேண்டும் என எண்ணி தட்சன், மன்மதனை அனுப்பி சிவபெருமானின் தவத்தை கலைக்க விரும்புகிறார். இந்த நேரத்தில் மன்மதன் ரதி தேவியை திருமணம் செய்கிறார். தொடர்ந்து தட்சனின் உத்தரவு ஏற்று மன்மதன் சிவபெருமானின் தவத்தை கலைக்க செல்வதற்கு தயாராகிறார். இதை ரதிதேவி தடுக்கிறார். கனவில் எமன் வருவதாகவும், மேலும் சிவன் நெற்றிக்கண்ணால் எரித்து விடுவார் என அச்சம் தெரிவிக்கிறாள்.

இருப்பினும் மன்மதன் சிவனின் தவத்தை கலைக்கிறார். தொடர்ந்து மன்மதனை எரிக்கும் படலம் நடக்கிறது. மேலும் ஆக்ரோசமடைந்த சிவபெருமான் வீர பத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழிக்கிறார். இவ்வாறு புராண வரலாற்று நிகழ்வுகளை கலைஞர்கள் வேடமிட்டு விடிய விடிய நடித்து காண்பிக்கின்றனர். இந்த நிகழ்வுகளை தெருக்கூத்து, கதாகாலட்சேபம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் போல் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story