கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- ரூ.1¼ லட்சம் பறிமுதல்


கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு

கடத்தூர்

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஈரோடு மாவட்டம் கோபியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை ஆய்வு குழு அலுவலர் சாந்தி தலைமையில் ஆய்வாளர் ரேகா, உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.30 மணி அளவில் வந்தனர்.

பின்னர் அவர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

கதவு பூட்டப்பட்டது

அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தவுடன் உடனே அலுவலக கதவை பூட்டினர். பின்னர் அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் அறையில் அதிரடியாக சோதனையிட்டனர்.

சோதனை தொடங்கியதும், அலுவலகத்தில் இருந்த அனைவரது செல்போன்களையும், அவர்களிடம் இருந்த ஓட்டுனர் உரிமம் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ரூ.1¼ லட்சம் பறிமுதல்

மேலும் அலுவலகத்தில் 2 புரோக்கர்கள் கையில் பணத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே போலீசார் விரைந்து சென்று அவர்கள் 2 பேரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் ஒருவரிடம் ரூ.15 ஆயிரத்து 300-ம், மற்றொருவரிடம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரமும் இருந்தது. மேலும் அவர்களிடம் இருந்து துண்டு சீட்டு ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த துண்டு சீட்டில் யார் யாருக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்ற விவரம் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இரவு வெகு நேரம் வரை சோதனை நீடித்தது.


Next Story